காஷ்மீர் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – காவல் துறை அறிக்கை

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான மசோதாக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலும் அளித்தார்.

காஷ்மீர் மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. வதந்திகள் பரவாமல் தடுக்க இணையதள சேவை, செல்போன் சேவைகள் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீரில் நிலவரம் மிகவும் மோசமடைந்து விட்டது என தெரிவித்தார்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் எதுவுமின்றி ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, ஸ்ரீநகர் காவல்துறை டுவிட்டரில் வெளியிடப்பட்ட பதிவுகளில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைதி நீடித்தது. எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. சில இடங்களில் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டன என குறிப்பிட்டிருந்தது.

இதேபோல், ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள உள்நோக்கம் கொண்ட, புனையப்பட்ட செய்தியை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools