காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்திய படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்து அறிவித்த பிறகு, பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாப்பூர் மற்றும் கெர்னி செக்டார்களில் இன்று காலை 7.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய நிலைகளையும் எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து, சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில் இதுவரை யாரும் காயமடைந்ததற்கான தகவல்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஷாப்பூர் மற்றும் கெர்னி செக்டார்களில் கடந்த மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2003ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த புரிந்துணர்தலை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து இந்தியா அந்நாட்டுக்கு வலியுறுத்தி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் அமைதி மற்றும் கட்டுப்பாடு நீடிக்க செய்ய இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மீறி வருகிறது.
இந்த வருடம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 2 ஆயிரம் முறை அத்துமீறிய தாக்குதல் நடந்துள்ளது. இதில் 21 இந்தியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.