பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுகிறது. எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சுந்தர்பானி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்ட்டார் குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம், பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்களில் நாயக் அனீஸ் தாமஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தகவலை இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.