காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – 3 பேர் காயம்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லைப்பகுதி மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில், எல்லையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லையோரம் உள்ள கிராமங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதேபோல் கடந்த திங்கட்கிழமை பூஞ்ச் மாவட்டம் சலோத்ரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.