Tamilசெய்திகள்

காஷ்மீர் எல்லையில் நுழையும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் – உளவுத்துறை எச்சரிக்கை

காஷ்மீரில் பதுங்கிஉள்ள பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயன்றபோது என்கவுண்டர் நடைபெறுகிறது.

இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். மேலும் எல்லை வழியாக காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை உளவுத்துறை அமைப்புகளும் ரகசியமாக கண்காணித்து அடிக்கடி எச்சரிக்கை தகவல்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருக்கிறது.

பாராமுல்லா, பந்தி போரா, குப்போரா ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளை விட வெளிநாட்டு பயங்கரவாதிகள் அதிக அளவில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

போலீசாரின் சமீபத்திய தகவல்களின்படி ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகள் 11 பேர் உள்ளனர் என்றும், 40 முதல் 50 வெளி நாட்டு பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதிகளின் மையமாக இருந்த தெற்கு காஷ்மீருடன் ஒப்பிடும் போது கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக வடக்கு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தததை அடுத்து அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட ஏராளமான பயங்கரவாதிகளை விடுவித்தனர்.

இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சித்து வருவதாக சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் வட காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவினார்களா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஆனால் இதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை நீண்ட காலமாக அதிகரித்து வருகிறது. இதனுடன் ஆப்கானிஸ்தானின் சமீபத்திய சூழ்நிலைகளுடன் ஒப்பிடமுடியவில்லை என்றார்.

வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டு பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் முக்கிய தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய தலைவர்கள் உள்பட மக்கள் பிரதிநிதியிடம் வெளியில் சென்றால் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதவை என ஆலோசனைகளை போலீசார் வழங்குகின்றனர். பகல் நேரத்தில் சோபோர் பகுதிக்கு செல்ல வேண்டாம். ஹந்த்வாரா மற்றும் ரபியா பாத் ஆகிய உட்புற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டதாக வடக்கு காஷ்மீரை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 32 வெளிநாட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 9 வெளிநாட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 102 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கமாண்டர்கள் ஆவார்கள்.