காஷ்மீர் எல்லைக்கு சென்ற ராணுவ வீர ரசிகர்! – வாழ்த்து கூறிய விஜய்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையால் எல்லைப் பகுதியான காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ராணுவ வீரர்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன். 2002-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். கடந்த 17 ஆண்டுகளாக நாட்டுக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.

தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார். தமிழ்ச்செல்வனுக்கு காஷ்மீரில் நிலவிவரும் பதட்டமான சூழ்நிலையால் பணிக்குத் திரும்பிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மனைவி, குழந்தைகள், பெற்றோரிடம் கூட இந்த தகவலைத் தெரிவிக்காமல் கிளம்பிய தமிழ்ச்செல்வன் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பாண்டியிடம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனே தமிழ்ச்செல்வனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார் விஜய். “நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எதுவும் ஆகாது. வெற்றியுடன் திரும்புவீர்கள். நீங்கள் திரும்பி வந்தவுடன் உங்களைச் சந்திக்கிறேன்” என்று விஜய் வாழ்த்தினார்.

விஜய்யுடன் பேசிய தமிழ் செல்வன் தான் மகிழ்ச்சியுடன் எல்லை காக்க காஷ்மீர் செல்ல இருப்பதாக முகநூல் பக்கத்தில் கூறி உள்ளார்.

எனக்கு ஏதாவது நேரிட்டால் என் போட்டாவை காட்டி அவருடன் புகைப்படம் எடுங்கள். நான் திரும்பி வெற்றியுடன் வந்தால் உண்மையாகவே அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்’ எனவும் முகநூல் பக்கத்தில் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools