Tamilசெய்திகள்

காஷ்மீருக்கு சென்ற குலாம் நபி ஆசாத் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காகவும், காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும் அந்த மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரியும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் நேற்று காஷ்மீருக்கு விமானத்தில் சென்றார்.

அவருடன் காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர்ரும் சென்றார். இருவரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் போய் இறங்கினர்.

அப்போது, அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல், அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். குலாம் நபி ஆசாத்தை வேறு விமானத்தில் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.

டெல்லிக்கு வந்து சேர்ந்த குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை என்னை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். வீட்டுக்கு செல்லவோ, கூட்டத்துக்கு செல்லவோ அனுமதிக்கவில்லை. பிறகு டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, காஷ்மீரை அழித்து விட்டது. உலக புகழ்பெற்ற காஷ்மீரை பிரித்து விட்டது. இதற்காக ஒவ்வொரு காஷ்மீரியிடமும் பிரதமரும், உள்துறை மந்திரியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை குலாம் நபி ஆசாத் விமர்சித்திருந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, அஜித் தோவல், காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்துக்கு சென்றார்.

நடைபாதையில் மக்களுடன் சேர்ந்து அவர் உணவு சாப்பிடுவதும், அவர்களுடன் உரையாடுவதும் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் வெளியாகி ‘வைரல்’ ஆனது.

இதுபற்றி கருத்து கேட்டபோது, “பணத்தால் யாரை வேண்டுமானாலும் வாங்கலாம்” என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.

அவரது கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:-

குலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்டவசமானது. நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாகிஸ்தானிடம் இருந்துதான் இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்பார்க்க முடியும். ஆனால், காங்கிரஸ் போன்ற பெரிய அரசியல் கட்சியிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த குற்றச்சாட்டை சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆகவே, ஆசாத் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ், செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *