பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்த நாட்டு மக்களுக்கு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா விலக்கிக் கொள்ளும் வரையில் அங்குள்ள மக்களுக்கு எனது அரசு துணையாக இருக்கும். காஷ்மீருக்கான தூதராக நான் செயல்படுவேன்.
என்னுடன் தொடர்பில் இருக்கும் உலகத் தலைவர்களிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எடுத்துக் கூறுவேன். ஐ.நா. பொதுசபை உள்பட சர்வதேச மன்றங்களில் இந்த விவகாரத்தை எழுப்புவேன்.
முஸ்லிம் நாடுகள் காஷ்மீருக்கு ஆதரவளிக்கவில்லை என்று மக்கள் கவலைப்படுவதாக அறிந்தேன். சில நாடுகள் தங்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு தற்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக குரல் எழுப்பாமல் இருக்கலாம்.
ஆனால் படிப்படியாக அவர்கள் இந்த விவகாரத்தில் குரல் கொடுப்பார்கள். அதை சரியான நேரத்தில் அவர்கள் செய்ய வேண்டும்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடி வரலாற்று பிழை செய்து விட்டார். காஷ்மீர் மக்களை பாதுகாப்பதாக வாக்களித்துள்ள ஐ.நா.சபை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியது அதன் பொறுப்பாகும்.
வரலாற்றை புரட்டிப்பார்த்தால் உலக அமைப்புகள் யாவும் பலம்வாய்ந்த நாடுகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளன. ஆனால் 125 கோடி முஸ்லிம் மக்கள் இந்த விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாட்டை எதிர்நோக்கி இருக்கின்றனர் என்பதை அந்த அமைப்பு புரிந்துகொள்ள வேண்டும்.
பெரிய நாடுகள் அனைத்தும் தங்களது பொருளாதார நலனை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளதா? இந்தியா- பாகிஸ்தான் இடையிலான முரண்பாடுகள் போரை நோக்கி சென்றால் இருநாடுகளும் அணு ஆயுதங்கள் வைத்துள்ளதை அந்த நாடுகள் நினைவில் கொள்ள வேண்டும்.
அணு ஆயுதப்போர் வெடித்தால் யாருக்கும் வெற்றி கிடைக்காது. அந்த போரின் பாதிப்பை இந்தப் பிராந்தியம் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உலகமே எதிர் கொள்ளும். எனவே இந்த விவகாரம் குறித்து சர்வதேச சமூகம் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.