காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை!

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதில் தொலைபேசி, செல்போன், இணையதள சேவை முடக்கமும் அடங்கும். பின்னர் அங்கு இயல்பு நிலை திரும்ப தொடங்கியதால் படிப்படியாக இந்த சேவைகள் திரும்ப வழங்கப்பட்டன.

குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தில் இந்த சேவைகள் முற்றிலும் வழங்கப்பட்ட நிலையில், காஷ்மீரில் வெறும் தொலைபேசி இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. தற்போது சுமார் 70 நாட்களுக்குப்பின் அங்கு செல்போன் சேவையும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி அனைத்து நிறுவனங்களின் போஸ்ட்பெய்டு செல்போன் இணைப்புகளும் நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் திரும்ப வழங்கப்படும் என மாநில அரசின் செய்தி தொடர்பாளரும், முதன்மை செயலாளருமான ரோகித் கன்சால் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தபின் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

எனினும் பிரீபெய்டு செல்போன் சேவை மற்றும் இணையதள சேவைகள் அனைத்தும் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதாக அவர் கூறினார். அதேநேரம் சுற்றுலா பயணிகளின் நலனுக்காக சுற்றுலா தலங்களில் இணையதள மையங்கள் அமைக்கப்படும் என்றும் கன்சால் குறிப்பிட்டார்.

காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் விலக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலில் வைக்கப்பட்டு இருக்கும் தலைவர்களை விடுவிக்கும் வகையில், அவர்கள் மீதான வழக்குகளை மாநில அரசு மறு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே ஸ்ரீநகரில் உள்ள சந்தைப்பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடினர். இந்த குண்டுவெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools