ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்கான காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக ஜம்மு-காஷ்மீரை விட்டு வெளியேறும்படி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு ஆகஸ்டு 5-ம் தேதிக்கு முன்னதாகவே வெளியேறினர்.
இதற்கிடையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தொலைதொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததையடுத்து ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வர விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீர் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் விதித்திருந்த தடையை திருப்பப்பெற உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடைமுறை வரும் வியாழக்கிழமை (அக்டோபர் 10) அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இந்த உத்தரவையடுத்து ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வரும் வியாழக்கிழமை முதல் தடையின்றி செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.