காஷ்மீரில் கொரோனோ வைரஸ் – பள்ளிகளுக்கு விடுமுறை
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 90-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 380 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 98 ஆயிரத்து 192 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் 31 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரத்த பரிசோதனையில் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தலைமை செயலாளர் ரோகித் கன்சல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு பகுதியை சேர்ந்த இருவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையை மீறி அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற இருவரும் மீண்டும் அழைத்துவரப்பட்டனர்.
அவர்களுக்கு கொரோனா உள்ளதா? என பரிசோதனை செய்ததில் வைரஸ் பாதிப்பிற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் சந்தேகத்திற்கு இடமான இருவரும் மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் கொரோனா அச்சம் எழுந்துள்ளதால் ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப்பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்யும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.