ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவ ராஜ்னி பாலா என்ற ஆசிரியை 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் வைத்து பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த அந்த ஆசிரியை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார்.
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் உயிரிழக்கின்றனர், இதுவே உண்மை, இது (காஷ்மீர் பைல்ஸ்) படம் அல்ல என்று தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
காஷ்மீரில், கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர், 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். (நேற்று முன்தினம்) ஒரு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார் என்று அவர் கூறியுள்ளார்.
காஷ்மீர் பண்டிட்கள் போராட்டம் நடத்துகிறார்கள், ஆனால் பாஜக மோடி அரசு தனது 8 ஆண்டு கொண்டாட்டத்தில் மும்முரமாக உள்ளது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காஷ்மீர் பண்டிட் கொலைகள் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹாவுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
டெல்லியில் நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.