காவிரி நீர் பெறுவதற்கு தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதன் காரணமாக குறுவைப் பாசனத்திற்காக காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 7500 கன அடியாகவும், பின்னர் 6,000 கன அடியாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.
காவிரியில் வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், 10,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலேயே, கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் பயிர்கள் வாடின. வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் என்பது காவிரி பாசனத்திற்கு போதுமானதல்ல. விளைந்து நிற்கும் பயிர்கள் கூட கருகுவதற்குத் தான் இது வழிவகுக்கும்.
கர்நாடகத்திடமிருந்து நமக்குரிய தண்ணீரைப் பெற சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கருகச் செய்து விடும். எனவே, விடுமுறை நாளாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரியில் கூடுதல் நீரைப் பெறுவதற்கு போர்க்கால வேகத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.