Tamilசெய்திகள்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது

உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. அதேபோல் ஒழுங்காற்று குழு கூட்டம் ஆகஸ்ட் 9 ம் தேதி நடந்தது. இந்த ஆண்டுக்கான காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று கூட்டம் ஆகியவை ஒருமுறை கூட நடத்தப்படவில்லை.

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் அதுகுறித்து ஆணையம் இதுவரை எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின்போது உச்ச நீதிமன்றம் வரையறுத்தபடி, தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.

இதேபோல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 6 மாதங்களுக்குப் பிறகு வரும் 28-ம் தேதி ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *