Tamilசெய்திகள்

காவிரியை மீட்க இருசக்கர வாகனத்தில் பயணித்த ஜக்கி வாசுதேவ்

நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் 2-வது களப்பணியாக தென்னிந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கினார்.

இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரித்து, காவிரியை மீட்பதற்காக ஜக்கி வாசுதேவ் காவிரியின் பிறப்பிடமான தலைகாவிரியில் இருந்து திருவாரூர் வரை 1,200 கி.மீ. தூரத்துக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு விவசாயிகளை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைகாவிரியில் இருந்து ஜக்கி வாசுதேவ் நேற்று தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காவிரியை மீட்கவேண்டும் என்ற இலக்கை நோக்கி மோட்டார் சைக்கிளில் அவர் புறப்பட்டார். அவருடன் மோட்டார் சைக்கிள் குழுவினரும் உடன் சென்றனர். காலை 11 மணிக்கு பயணத்தை தொடங்கிய ஜக்கி வாசுதேவ் பிற்பகல் 3.30 மணி அளவில் மடிகேரி சென்றடைந்தார்.

முன்னதாக அவர் தலைகாவிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘காவிரியின் ஊற்றிடமான தலைகாவிரியில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறோம். பருவமழை அற்புதமாய் கொட்டி தீர்க்கிறது. எலும்புகளும் நனைந்திட பயணித்துக்கொண்டிருக்கிறோம். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சவால் மிகுந்த இந்த பயணத்தில் என்னுடன் பயணிக்க பலரும் உறுதியுடன் இருப்பது பாராட்டுக்குரியது. இந்த மழையை மண்ணுக்குள் அனுப்புவதற்கு மரங்கள் அவசியம்’ என்றார்.

ஜக்கி வாசுதேவ் இன்று (புதன்கிழமை) ஹூன்சுருக்கு மாலை 4 மணி அளவில் சென்றடைகிறார். இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) மைசூரு, நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மாண்டியா, வருகிற 8-ந் தேதி பெங்களூரு, 11-ந் தேதி ஓசூர், தர்மபுரி, 12-ந் தேதி மேட்டூர், ஈரோடு, 13-ந் தேதி திருச்சி, தஞ்சை, 14-ந் தேதி திருவாரூர் (விவசாய சங்க தலைவர்கள், வணிகர்கள், வர்த்தக சங்க தலைவர்களை சந்திக்கிறார்), 15-ந் தேதி புதுச்சேரி வழியாக சென்னை வந்தடைகிறார்.

சென்னையில் அன்றைய தினம் மாலை 4 மணி அளவில் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பயணத்தை அவர் நிறைவு செய்கிறார். ஜக்கி வாசுதேவ் பயணம் மேற்கொள்ளும் காவிரி வடிநில பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *