காவிரியில் வீணாக களக்கும் நொய்யல் ஆற்றின் 15 டி.எம்.சி தண்ணீர்

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர், ஒரத்துப்பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும் ஆறாக உள்ள நிலையில், மற்ற காலத்தில் கோவை, திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் செல்லும் வடிகாலாக மாறி விடுகிறது.

நொய்யல் ஆற்றில் கொங்கு சோழர்கள் ஆட்சி காலமான 12-13ம் நூற்றாண்டுகளில் 45-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் இருந்துள்ளது.

தற்போது நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 23 தடுப்பணைகளும், 31 குளங்களும் மட்டுமே வரலாற்றை சுமந்த வண்ணம் எஞ்சி உள்ளது. மீதமிருந்த குளங்கள் காணாமல் போயும், தடுப்பணைகள் உடைக்கப்பட்டும் உள்ளது. கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்த வெள்ளப்பெருக்கால் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வருகிறது. கடந்த 13 நாட்களில் நொய்யல் ஆற்றில் சென்ற வெள்ள நீரின் அளவு சுமார் 15 டி.எம்.சி.க்கு மேல் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் நொய்யல் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 டி.எம்.சி. வரை மழைத்தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. ஏற்கனவே கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் குளங்கள் நிரப்பபட்டாலும், இன்னும் ஏராளமான தடுப்பணைகள் உடைக்கப்பட்டும், உடைந்தும் கிடக்கிறது. இவ்வாறு உடைக்கப்பட்ட தடுப்பணைகள் மூலம் அருகில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டதற்கான தடயங்கள் உள்ளது. அந்த குளங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools