Tamilசெய்திகள்

காவல் உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து — நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா
உள்பட காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கோயில் விழா முடிவடைந்த நிலையில், அங்கு வைக்கட்டு இருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றிய ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக
கூறப்படுகிறது.

அப்போது ஆறுமுகம் திடீரென காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார். அருகில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு ஆறுமுகத்தை கைது செய்ததுடன், காவல் உதவி ஆய்வாளரை
நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஆறுமுகம் மீது மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக வழக்குப் பதியப்பட்டிருந்தது. இது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோயில் திருவிழா பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை ஆறுமுகம் கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷாவை, நெல்லை சரக டிஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.