காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்
கருப்பர் நகரின் வடக்கு எல்லையில் இப்ராஹிம் சாஹிப் தெருவில் ஒரு பொதுப் பூங்கா இருக்கிறது.
மற்ற பூங்காக்களைப் போலல்லாமல் ஓர் உயர்ந்த கட்டடத்தின் மேல் இருப்பதால் தாவரங்களை ரசிக்க சில படிகள் ஏற வேண்டும். அதனால் இது ‘மாடிப் பூங்கா’ என்று அழைக்கப்படுகிறது. அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று நேரே இங்கு வந்து சோம்பிப் படுத்திருக்கும் பலரும் தோட்டத்தின் சரித்திர முக்கியத்துவத்தை உணரவில்லை. உள்ளூர்வாசிகள் கூடச் சரித்திரம் தெரியாமல் இந்தப் பூங்காவைக் கடந்து செல்கின்றனர்.
வரலாற்றின் ஆரம்பக் காலத்திலிருந்தே, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளச் சுற்றுச்சுவர்தான் முதல்கட்ட ஆயுதம் என்பதை மனிதன் உணர்ந்திருந்தான். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய நிறுவனம் முதலில் கட்டியதும் சுற்றுச் சுவரைத்தான். ஆனால், ஒரு கட்டத்தில் கோட்டையின் செழிப்புக்குப் பூர்வீகக் குடிமக்கள் வாழ்ந்த கருப்பர் நகரமும் மிக முக்கியமானது என்பதைக் கோட்டையில் உள்ள சக்திகள் உணர்ந்தனர். எதிரிகளும்தான்.
ஜார்ஜ் கோட்டை உயர்ந்த சுற்றுச்சுவர்கள், கொத்தளங்கள் மற்றும் பீரங்கிகளால் நன்கு பாதுகாக்கப்பட்டதால், ஹைதர் அலி போன்ற படையெடுப்பாளர்கள் மிக அருகில் செல்வதைத் தவிர்த்தனர். ஆனால் அவர்கள் தங்கள் கவனத்தைக் கோட்டையைச் சுற்றிப் பிளாக் டவுனில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் மீது திருப்பி, அவர்களைத் தாக்கிக் கொள்ளையடித்தனர். கருப்பர் நகரைச் சுற்றி ஒரு பெயரளவு பாதுகாப்புக்காக ஒரு மண் சுவர் மட்டுமே இருந்தது. நல்லதொரு அரண் அமைக்கப்பட வேண்டும் என்று திட்டம் இருந்தாலும், செலவுக்குப் பயந்து தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தனர் கம்பெனியர்.