பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருக்கு ரியோடிஜெனீரோ மாகாணத்தின் தெற்கு கடற்கரை பகுதியையொட்டி சொகுசு பங்களா உள்ளது. செழுமையான மரங்களை கொண்ட அந்த பண்ணை வீட்டின் அருகில் செயற்கை ஏரி அமைத்தல் உள்பட பல்வேறு வசதிகளை உருவாக்கும் வகையில் உரிய அனுமதியின்றி கட்டுமான பணிகளை நெய்மர் மேற்கொண்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த பணிகளை தொடர கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது.
அத்துடன் அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் நெய்மர் சுற்றுப்புற சூழல் விதிமுறைகளை கடைபிடிக்காததுடன் முறையான அனுமதி பெறாமல் நதி நீரை திசைதிருப்புதல், மரங்களை வெட்டுதல், கற்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரியோடிஜெனீரோ மாகாண அரசு நெய்மருக்கு ரூ.28.6 கோடியை அபராதமாக விதித்துள்ளது. அத்துடன் இந்த விதிமீறல் செயல்கள் குறித்து உள்ளூர் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், சிவில் போலீஸ், சுற்றுச்சுழல் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவை தொடர்ந்து விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.