Tamilசெய்திகள்

கால்நட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு

கால்நடை பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் இன்று நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விழாவை புறக்கணித்தார்.

பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணவேந்தர் கே.என்.செல்வகுமார் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.

இருவரின் பதவிக்காலத்தையும் ஏப்ரல் 9-ம்தேதியில் இருந்து ஓராண்டு காலம் நீட்டித்து பல்கலைக்கழக ஆளுநரான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இரு துணைவேந்தர்களும் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பதவி நீட்டிப்பு ஆணையை பெற்றுக்கொண்டனர்.

பல்கலை. துணைவேந்தருக்கு அரசின் ஒப்புதல் இல்லாத நிலையில், மேலும் ஒரு ஆண்டு பதவியை நீட்டித்து கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணிப்பது தொடர்கிறது.