X

காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு விவசாயிகளை தயார்ப்படுத்த வேண்டும் – கனிமொழி எம்.பி பேச்சு

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கிய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மண்டல ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வேளாண்மை துறை சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வேளாண்மை சார்ந்த பொருட்களை பார்வையிட்டனர். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள். சண்முகையா, மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. விவசாயம் தான் நாட்டின் ஆணிவேர். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் போது மூடப்படாத ஒரே துறை விவசாயத்துறை ஆகும். அனைத்தையும் மூடிவிடலாம். ஆனால் மூடமுடியாத ஒரே துறை விவசாயம் தான்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகளின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகளை தயார்படுத்த வேண்டும். விவசாய ஆராய்ச்சியில் புதிய பயிர்கள் கண்டு பிடிக்கப்பட்டு முன்னோடியாக இருக்கிறோம். அது வெளியில் தெரியாத நிலை உள்ளது. தமிழகத்தில் விவசாயம் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.