காற்று மாசு அதிகரிப்புக்கு டெல்லி மற்றும் மத்திய அரசு தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முக கவசம் மற்றும் வெங்காய மாலை அணிந்திருந்தனர். டெல்லியில் நிலவும் காற்று மாசு மற்றும் வெங்காய விலை உயர்வை குறிக்கும் வகையில், அவர்கள் இவ்வாறு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய அரவிந்தர் சிங், “எதிர்கட்சி தலைவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் போது, டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நிலைமை மோசமான பிறகுதான் அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர், அதுவும் அவர்கள் தற்காலிக தீர்வுக்கான வழியை பின்பற்றுகின்றனர். காற்று மாசு விவகாரம் தொடர்பாக அரசாங்கம் ஆண்டு முழுக்க கவனம் செலுத்த வேண்டும்.”

“காற்று மாசு ஏற்பட முக்கிய காரணம் தூசிகள் தான். மெட்ரோ கட்டுமானங்கள் டெல்லியில் ஐந்து ஆண்டுகள் வரை தாமதமாகி இருக்கின்றன. இதே நிலைதான் மேம்பாலம் மற்றும் இதர உள்கட்டமைப்பு சார்ந்த கட்டுமான பணிகளின் போதும் தொடர்கிறது. பொது போக்குவரத்து முறை முற்றிலுமாக தகர்ந்துவிட்டது. வாகன போக்குவரத்து காரணமாக டெல்லியில் 40 சதவீத மாசு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news