X

காற்றாலை மின்சார உற்பத்தி உச்சநிலையில் இருக்கிறது – எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்

தமிழ்நாடு மின்சார நுகர்வோர்களுக்கு அனல் மின்சார உற்பத்தி நிலையம், அணு மின்சார உற்பத்தி நிலையம், நீர் மற்றும் கியாஸ் மின்சார நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர சீசன் காலங்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்துடன் சோலார் தகடுகள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த 10-ந்தேதி மாலை 6.40 மணி அளவில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 414 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை 3.20 மணிக்கு 3 ஆயிரத்து 794 மெகாவாட், காலை 7.50 மணிக்கு 4 ஆயிரத்து 314 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தது.

தற்போதைய நிலையில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சநிலையில் இருக்கிறது. இதுதவிர சோலார் மூலம் கடந்த 10-ந்தேதி 4 ஆயிரத்து 672 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மற்றும் சோலார் மூலம் சராசரியாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது.

நேற்று காலை 7.50 மணி அளவில் அனல் மின்நிலையங்களில் உற்பத்தி பாதியாக அதாவது 1,599 மெகாவாட் என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 7.50 மணி நிலவரப்படி தேவை 15 ஆயிரத்து 331 மெகாவாட் என்ற அளவில் இருந்தது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.

Tags: tamil news