கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளம் – பிரதமர் மோடி
டெல்லியில் கார்கில் போரின் 20-ம் ஆண்டையொட்டி நடைபெற்ற கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சில நாடுகள் பயங்கரவாதத்தை பரப்புவதற்காக அவர்களுக்காக போரில் ஈடுபடுகின்றன. இதனை தீர்ப்பதற்காக உலகளவில் ஒருங்கிணைந்த முயற்சி எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளம், மன உறுதியின் அடையாளம், திறனின் அடையாளம். போர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுவது அல்ல, ஆனால் ஒட்டுமொத்த தேசத்தால் நடத்தப்படுவது. கார்கில் வெற்றி இன்னும் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்ததாகவே உள்ளது. கார்கில் வெற்றி ஒவ்வொரு இந்தியனின் வெற்றி.
பாகிஸ்தான் 1999-ம் ஆண்டு கார்கில் வழியாக தவறான முறையில் எல்லையை மறுவரையறை செய்ய முயற்சித்தது. ஆனால் இந்திய பாதுகாப்பு படைகள் அந்த தீய எண்ணத்தை முறியடித்தது. போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் நான் கார்கிலுக்கு சென்றேன். அது எனக்கு ஒரு யாத்திரை போல இருந்தது.
தேசத்தின் பாதுகாப்பு எந்த தாக்குதலுக்கும் அசைந்து கொடுக்காது. இப்போதும் அதேபோல தொடர்கிறது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு இடையே கூட்டு முயற்சியை உறுதி செய்வதற்கான நேரம் வந்துள்ளது. தேசம் பாதுகாப்பாக இருந்தால் தான் வளர்ச்சி காண்பது சாத்தியமாகும்.
தேசத்தின் பாதுகாப்பு என்று வரும்போது நாங்கள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகமாட்டோம். பாதுகாப்பு படைகளை நவீனமயமாக்குவது தான் எனது அரசின் முக்கிய முன்னுரிமை ஆகும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.