காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து மந்தனா விலகல்

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று (காலை 9 மணி) நடக்கிறது.

இந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக நட்சத்திர தொடக்க வீராங்கனை 23 வயதான ஸ்மிர்தி மந்தனா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். வலைப்பயிற்சியின்போது பந்து தாக்கியதில் அவரது வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பெண்கள் அணியின் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் கூறுகையில், ‘இது லேசான எலும்பு முறிவு தான். அவரது கால்பாதத்தில் கொஞ்சம் வீக்கம் உள்ளது. காயத்தன்மையை அறிய இன்னும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து சோதிக்க வேண்டி உள்ளது. அதனால் மந்தனா எப்போது களம் திரும்புவார் என்பதை இப்போதே கணிப்பது கடினம்’ என்றார். அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் மந்தனா ஆடுவது சந்தேகம் தான். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் 20 வயதான பூஜா வஸ்ட்ராகர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் கூறுகையில், ‘மந்தனா அனுபவம் வாய்ந்த வீராங்கனை. ஆனால் மந்தனா இல்லாததால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நிறைய ரன்கள் குவித்துள்ள பிரியா பூனியா போன்ற மற்ற வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த தொடர், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது கிடையாது. அதனால் புதிய வீராங்கனைகளை பரிசோதித்து பார்க்க முயற்சிப்போம். அவருக்கு பதிலாக களம் காணும் வீராங்கனை வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news