ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை அணி 165 ரன்கள் அடித்தால் வென்று என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த போட்டியில் ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார்.
பரபரப்பான கட்டத்தில் போட்டியின் 19-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் பந்தை வீசும்போது அவரது கணுக்காலில் சற்று வலி ஏற்பட்டது. அதன்பின் சிகிச்சை எடுத்துக் கொண்டு பந்து வீச முயன்றார். ஆனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. இதனால், அந்த போட்டியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், கணுக்கால் மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து புவனேஷ்வர் குமார் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புவனேஷ்வர் குமார் விலகும்பட்சத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
முதல் இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விக்குப்பின் தற்போது இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள நிலையில் புவனேஷ்வர் குமாரின் விலகல் குறித்த தகவல் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
ஏற்கனவே, மிட்செல் மார்ஷ் காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.