X

காமெடியனாக நடிக்க ஆசைப்படும் வில்லன் நடிகர்!

சிவகார்த்திகேயனின் சீமராஜா, விஜய் சேதுபதியின் தர்மதுரை படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரகு ஆதித்யா. இவர் வில்லனாக நடித்துள்ள தேவராட்டம் படம் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் ரகு ஆதித்யா மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் தனது கதாபாத்திரம் மீது மக்களுக்கு வெறுப்பு தான் ஏற்பட்டுள்ளது என்கிறார் ரகு. இது குறித்து அவர் கூறியதாவது:-

’தேவராட்டம் படத்தில் நடிக்க முத்தையா என்னை அழைத்தார். படப்பிடிப்புக்காக மதுரைக்கு சென்றபோது தான் எனக்கு இப்படி ஒரு மோசமான வில்லன் கதாபாத்திரம் என்பது தெரிந்தது. இந்த ரோலில் நடித்தால் நமது பெயர் கெட்டுப்போய் விடுமே என முதலில் தயங்கினேன். ஆனால் முத்தையா தான் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார்.

அவர் சொன்னது போலவே, இந்த கதாபாத்திரம் எனக்கு சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. மக்களுடன் இணைந்து மதுரையில் படம் பார்த்தேன். அப்போது இடைவேளையின் போது கவுதம் என்னை வெட்டிக்கொன்றதும், ரசிகர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.

இது தான் அந்த கதாபாத்திரத்தின் வெற்றி. மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தால் தான் வில்லனாக என்னால் உயர முடியும் என்பதை புரிந்து கொண்டேன். எனது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. வில்லனாக மட்டுமல்லாமல், காமெடியனாகவும், இன்னும் பல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என ரகு ஆதித்யா கூறினார்.