X

காமராஜர் வழியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறார் – அண்ணாமலை பேச்சு

தமிழக பா.ஜனதா தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் அண்ணாமலை. இவர் கர்நாடகத்தின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இந்நிலையில் கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா துணை தேர்தல் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக இவர் கர்நாடகத்தில் தங்கியிருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நடந்த மாவட்ட பா.ஜனதா இளைஞர்கள் மாநாட்டில் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:-

இந்தியாவில் பிரதமர் தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 70 வயதானாலும், இளைஞர் போன்று பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். மேலும் இளைஞர்களுக்கு அவரது ஆட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. குறிப்பாக வேலை வாய்ப்புகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

2014-ம் ஆண்டுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. குடும்ப அரசியலில் தான் காங்கிரஸ் ஆர்வம் காட்டி வந்தது. பிரதமர் மோடி புதிய இந்தியாவை உருவாக்கி வருகிறார். அதற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. உலக நாடுகளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200 விற்பனையாகி வருகிறது. ஆனால் இந்தியாவில் மோடி அதை தடுத்து நிறுத்தியுள்ளார். ரூ.100-க்கும் குறைவாகத்தான் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய இந்தியாவின் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் பழமையான இந்தியாவை விரும்புகின்றனர். எனவே அவர்களிடம் ஆட்சியை கொடுத்தால், இந்தியாவை மீண்டும் பின்நோக்கி செல்லும்படி செய்து விடுவார்கள். இளைஞர்களின் அதிகாரம் நசுக்கப்பட்டுவிடும். இளைஞர்கள் முன்னேற முடியாது. வேலை வாய்ப்புகள் கிடைக்காது.

இந்தியா முழுவதும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகத்தில் 1 கோடியே 60 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் கனவு திட்டம். அவரின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்.

காமராஜர் வி.ஐ.பி கலாசாரத்தை அரவே வெறுத்தார். தனது வீட்டிற்கு கூட குடிநீர் குழாய் வேண்டாம் என்று கூறியவர். அவரது வழியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் எந்த மாற்றமும் தமிழகத்தில் ஏற்பட்டு விடாது. ஒன்றரை ஆண்டுகள் ஆட்சி நடந்துள்ளது. பெண்களுக்கு வழங்கப்படுவதாக கூறிய ரூ.1000 இன்னும் வழங்கவில்லை. இதனை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.

இந்தியா-சீனா எல்லையில் 200 மீட்டர் வரை சீன ராணுவ ஊடுருவியது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது. இந்த பெரும் பிரதமர் மோடியையே சேரும்.

இவ்வாறு அவர் கூறினார்.