22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இத்தொடர் இன்று நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. நேற்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.
நேற்று இந்தியா தனது அனைத்து விளையாட்டு போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது. இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.