‘அயன்’, ‘மாற்றான்’ படங்களை தொடர்ந்து சூர்யா – இயக்குநர் கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் ‘காப்பான்’ எப்படி என்பதை பார்ப்போம்.
ராணுவ வீரரான சூர்யா, பல அண்டர்கவர் ஆபரேஷன்களை வெற்றிகரமாக செய்து முடிப்பதோடு, பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய நடக்கும் முயற்சியையும் முறியடிக்கிறார். இதனால், பிரதமர் மோகன்லால் சூர்யாவை தனது தனிப்பட்ட பாதுகாவலராக நியமிக்க, அடுத்தடுத்து மோகன்லாலை கொலை செய்யும் முயற்சிகள் நடக்க, அதில் இருந்து அவரை காப்பாற்றும் சூர்யா, பிரதமரை கொலை செய்ய முயற்சிப்பவர்கள் யார்? என்பதையும், அவர்கள் எதற்காக இதை செய்கிறார்கள் என்பதையும் கண்டரிய களத்தில் இறங்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் அவருக்கு தெரிய வருவதோடு, பிரதமரை கொலை செய்பவர்கள் அவர் அருகிலே இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். அவர்கள் யார்? என்பதை எப்படி கண்டுபிடித்து அவர்களை களை எடுக்கிறார், என்பதே படத்தின் கதை.
ஹாலிவுட் பட ஸ்டைலில், சஸ்பென்ஷ் ஆக்ஷன் படமாக இருந்தாலும், தமிழ்க ரசிகர்களுக்கு பிடித்த வகையிலும், அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையிலும் கே.வி.ஆனந்தும், பட்டுக்கோட்டை பிரபாகரும் திரைக்கதையை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.
ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் சூர்யா ஓடும் டாங்கர் ரயில் ஒன்றை வெடிகுண்டு வைத்து தகர்ப்பபதோடு தொடங்கும் படம், இறுதியில் அவர் எதற்காக அந்த ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கிறார் என்ற காரணத்தை சொல்வது வரை, படத்தில் அடுத்தது என்ன நடக்கும், யார் பிரதமரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள், என்ற எதிர்ப்பார்ப்பு நம்முல் இருந்துக் கொண்டே இருக்கிறது.
சூர்யா எப்போதும் போல தனது பணியை நூறு சதவீதம் செய்திருக்கிறார். எஸ்.பி.ஜி வீரராக சிறு சிறு ரியாக்ஷன்களை கூட அசத்தலாக கொடுத்திருக்கும் சூர்யா, விவசாயிகள் பற்றி பேசுவது மட்டும் அல்லாமல், உரிமைக்காக போராடுபவர்களுகாகவும் குரல் கொடுத்திருக்கிறார்.
பிரதமர் வேடத்தில் நடித்திருக்கும் மோகன்லால், அவரது மகனாக நடித்திருக்கும் ஆர்யா, சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதாவது ஒரு இடத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்வதோடு, அவர்கள் மீதும் ரசிகர்கள் கவனம் திரும்பும் வகையில் திரைக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.
பாட்டுக்காக மட்டுமே ஹீரோயின் என்று இல்லாமல் சாயீஷாவுக்கு கதையுடன் பயணிக்கும் கதாபாத்திரம். அதை அவர் சரியாகவே கையாண்டிருக்கிறார்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருப்பது போல ஹாரிஷ் ஜெயராஜின் இசை பலம் சேர்க்கவில்லை. குறிப்பாக பின்னணி இசையை கூட அவர் ஒரிஜனலாக கொடுக்காமல், முக்கியமான காட்சி ஒன்றில் வேறு ஒரு இசையமப்பாளரின் பீஜியத்தை பயன்படுத்தியிருக்கிறார்.
இதுவரை கே.வி.ஆனந்த் படங்கள் எப்படி இருக்குமோ அதே ஸ்டைலில் தான் இப்படமும் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு படத்திலும் ஒரு புது விஷயத்தை பற்றி பேசும் கே.வி.ஆனந்த், இரு நாடுகளுக்கிடையே எப்படிப்பட்ட யுத்தம் எதிர்காலத்தில் நடக்கும் என்பதை இப்படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
ஹாலிவுட் ஸ்டைலில் படம் இருந்தாலும், நம்ம உள்ளூர் விவசாயிகளின் நிலையையும், விவசாயத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பேசியிருக்கும் கே.வி.ஆனந்த், தஞ்சை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பதோடு, அங்கு விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிற்சாலைகளும் இருக்க கூடாது, என்ற மக்களின் கனவை காட்சிப்படுத்திய விதமும், அதை படத்தில் சொல்லிய விதமும் சபாஷ் போட வைக்கிறது.
பாடல் காட்சிகளுக்காக புது புது லொக்கேஷன்களை கண்டுபிடிக்கும் கே.வி.ஆனந்த், இந்த படத்திலும் எரிமலை பின்னணியில் ஒரு பாடலை படமாக்கியிருக்கிறார். ஆனால், அந்த பாடலை படம் முடிந்து எண்ட் டைடில் கார்டு ஓடும் போது போடுவதால் அதை சரியாக பார்க்க முடியவில்லை.
ஆக்ஷன் சஸ்பென்ஸ் ஜானர் படமாக இருந்தாலும், அதில் விவசாயத்தைப் பற்றி அழுத்தமாக பேசியிருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த், பாமர மக்களுக்கும் படம் புரிய வேண்டும் என்பதற்காக திரைக்கதையை நேர்த்தியாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கிறார். அதே சமயம், பிரதமரை பல முறை கொலை செய்ய முயற்சிப்பது போல காட்டியிருப்பது தான் சற்று நெருடலாக இருக்கிறது. இதை தவிர்த்து படத்தில் குறை என்று எதையும் சொல்ல முடியாது.
விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த படமாக மட்டும் இல்லாமல், அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாகவும் இருக்கிறது.
மொத்தத்தில், ‘காப்பான்’ அனைத்து தரப்பினரையும் ஈர்ப்பான்
-ரேடிங் 3.5/5