Tamilசெய்திகள்

காபூல் விமான நிலையத்தில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல்

அமெரிக்கா தலிபான்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி 31-ந்தேதிக்குள் (நாளை) ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட வேண்டும்.

எனவே ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள அமெரிக்க படைகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. ராணுவ தளவாடங்களுடன் அவர்கள் வெளியேறி வருகிறார்கள்.

தற்போது 4 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே காபூல் விமான நிலைய பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மற்ற நாட்டினரையும், ஆப்கானிஸ்தான் பொதுமக்களையும் தொடர்ந்து விமானங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

அமெரிக்க படைகள் வெளியேறும் நேரத்தில் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் (கே பிரிவு) காபூல் விமான நிலையத்தில் 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 180 பேர் பலியானார்கள்.

அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க உளவு படைக்கு தகவல் கிடைத்தது. எனவே அங்குள்ள அமெரிக்கர்களும் மற்றவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விமான நிலையம் அருகே குவிவதை தவிர்க்க வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் கூறி இருந்தார்.

பயங்கரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் அந்த பகுதியில் அமெரிக்க படைகள் உஷாராக இருந்தன.

இந்த நிலையில் இன்று பயங்கரவாதிகள் வெடிகுண்டு ஏற்றி வந்த காருடன் விமான நிலையம் நோக்கி வந்தனர். இதை முன்கூட்டியே கண்டு பிடித்த அமெரிக்கா அந்த கார் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கார் வெடித்து சிதறி தீப்பிடித்தது.

இதுபற்றி அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் பில்அர்பன் கூறும்போது, “விமான நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வெடி குண்டுகளுடன் கார் வந்தது. எனவே அதை நாங்கள் அழித்தோம். இதன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது.

அந்த வெடிகுண்டு காரை ஏவியது யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி கொண்டு இருக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் அந்த இடத்தில் இருந்த 3 குழந்தைகள் இறந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் பயங்கரவாதிகள் விமான நிலையத்தை நோக்கி ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். அடுத்தடுத்து ராக்கெட் குண்டுகள் விமான நிலையத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தன.

ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல்கள் வந்தால் முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு சாதனங்கள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்தன. அவை மூலம் சில ராக்கெட்டுகளை அழித்தனர். ஆனாலும் சில குண்டு விமான நிலைய கட்டிடத்தில் வந்து விழுந்தது. இதில் விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இந்த தாக்குதலை ஐ.எஸ்.பயங்கரவாதிகள்தான் நடத்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கத்தில் உள்ள கே பிரிவினர் தலிபான்களுக்கு கட்டுப்பட மறுக்கிறார்கள். அவர்கள் அமெரிக்கா வெளியேறி செல்வதற்கு முன்பாக கடும் சேதத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள்.

இன்னும் 48 மணி நேரத்தில் அமெரிக்க படைகள் அங்கிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும். அதற்குள் என்ன நடக்குமோ? என்ற அச்சநிலை அங்கு நிலவுகிறது. எப்படியாவது சேதம் இல்லாமல் சென்று விட வேண்டும் என்று அமெரிக்கா முயற்சிக்கிறது.

அதே நேரத்தில் அங்கிருந்து தப்பி செல்வதற்காக விமான நிலையத்தில் கூடியிருக்கும் மக்களையும் பத்திரமாக வெளியேற்றி விட அமெரிக்கா முயற்சித்து வருகிறது.