X

கான்பூரில் மின்சார பேருந்து மோதி விபத்து – 6 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டாட் மில் குறுக்கு சாலை பகுதி அருகே இன்று மின்சார பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக
கான்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துச் சாவடி வழியாக வேகமாக வந்த அந்த பேருந்து அங்கிருந்த மூன்று கார்கள் மற்றும் பல பைக்குகளை சேதப்படுத்தியதுடன் லாரி மீது மோதி நின்றது. பேருந்தின் ஓட்டுநர் தலைமறைவாக உள்ளார், அவரைத் தேடி வருவதாக கிழக்கு கான்பூர் காவல் துணை ஆணையர் பிரமோத் குமார் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கான்பூர் பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்த செய்தியால் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாகவும்,  இந்த சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிலிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்றும் குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பிரியங்கா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.