Tamilசெய்திகள்

காந்தி வழியில் நான் வருவேன், அவர் என் தந்தையை போன்றவர் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொருளாளர் சுகா தலைமை தாங்கினார். நெல்லை மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

நெல்லை என்றால் நினைவுக்கு வருவது அரிவாளும், அல்வாவும் தான். இதுவரை உங்களுக்கு அல்வா கொடுத்தார்கள். இனி நீங்கள் ‘அல்வா’ கொடுக்க வேண்டும். இந்த கூட்டம் சினிமா மோகத்தால் வந்த கூட்டம் அல்ல. நாளைய தமிழகத்தை உருவாக்க வந்த கூட்டம். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கும்போது கிண்டல் அடித்தார்கள். இப்போது வசை பாடுகிறார்கள். நாளை எதுவும் நடக்கலாம்.

நாங்கள் சாதனை படைக்க விரும்புகிறோம். சாதனை என்பது சொல் அல்ல. செயல். 37 ஆண்டுகளாக எனது நற்பணி மன்றத்தில் பணியாற்றினார்கள். தற்போது அவர்களே நிர்வாகிகளாக இருக்கிறார்கள். நற்பணி மன்றத்தில் எந்த பிரதிபலனும் இல்லாமல் பணியாற்றியவர்கள்தான் தற்போது நிர்வாகிகளாக உள்ளார்கள்.

காந்தியை நாம் தலைவராக ஏற்றுக் கொண்டோம். அவருடைய அகிம்சை பெரிய வீரம். அதனை கடைபிடிப்பது மிகவும் கஷ்டமானது. காந்தி வழியில் நான் வருவேன். அவர் என் தந்தையை போன்றவர். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது எனது முடிவு. கட்சி தொடங்கவில்லை என்றாலும் எனது கனவையும், கடமையையும் நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருப்பேன்.

கட்சி தொடங்கியதால் அதன்மூலம் சாதிக்க விரும்புகிறேன். சிலர் வரலாமா, வேண்டாமா என நடுக்கோட்டில் நிற்கிறார்கள். அவர்கள் மக்கள் நீதி மய்யத்துக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும். மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நமது கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறப்படுகிறது. அந்த விருப்ப மனுவில் உங்கள் பரிந்துரைகள் இருக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இல்லாதவர்களும் மனு செய்யலாம். நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியது உங்கள் கடமை. ஊழலுக்கு எதிரானவர்கள், தகுதியானவர்கள், சுயநலம் இல்லாதவர்கள் போட்டியிட வேண்டும். நல்லவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதுவரை மக்களுக்கு நல்லது செய்யாதவர்கள் மாறி மாறி வந்துள்ளனர். அதற்கு மாற்றாக இந்த கட்சி.

தமிழன் என்பது விலாசம் தான். அதை சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள். வாரிசு அரசியலுக்கு எதிராக இருக்க வேண்டும். புதிய தமிழகத்தை உருவாக்கும் முனைப்புடன் நாம் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டு வேட்பாளர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களிடத்தில் நீங்கள் விருப்ப மனுவை கொடுங்கள். சரியானவர்களை நான் தேர்வு செய்வேன்.

வீரர்களை அரசு பாதுகாக்க வேண்டும். அதுபோல் மக்கள் நலனும் பாதுகாக்க வேண்டும். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிக்கு கலவரத்தின்போது எந்தெந்த இடங்களில் சுட வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால் ஸ்டெர்லைட் பிரச்சினையில் வேன் மீது ஏறி நின்று நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இது சரியா?. கலவரம் ஏற்பட்டால் ராணுவத்தை அனுப்புவதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். யார் வருவார். சுப்பிரமணியன் போன்ற நமது ராணுவ வீரர்கள் தான் வருவார்கள். அவரால் நம்மை சுட முடியுமா. இதை கேட்டால் நம்மை விமர்சனம் செய்வார்கள். சில அரசியல் கட்சி தலைவர்கள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சாகும்போது எந்த சொத்துகளும் கூட வருவதில்லை. ஆஸ்பத்திரியில் எந்த பணமும் நம்மை காப்பாற்றுவதில்லை. நமக்காக வெளியே நிற்கும் தொண்டர்களை கவனிக்க தவறி விட்டார்கள். அதை நாம் செய்ய மாட்டோம்.

மத்திய அரசை பொறுத்தவரையில் தேசிய நீரோடையில் தமிழ் கலக்கவில்லை என்று கூறுகிறார்கள். கொல்கத்தா, பஞ்சாப் போன்ற வடமாநிலங்களுக்கு சென்றால் அங்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரோ, அண்ணா பெயரோ, கக்கன் பெயரோ இருப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், திலக் போன்ற தலைவர்கள் பெயரை நாம் வைத்திருக்கிறோம். தேசிய தலைவர்கள் பெயரை மறக்காமல் வைத்திருப்பவர்கள் தமிழர்கள் தான்.

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன? என்று கேட்கிறார்கள். நான் சொல்கிறேன். மக்கள் நலனே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை. தமிழகத்தில் இழந்ததை மீட்போம். சாதிகள் அற்ற சமத்துவத்தை உருவாக்குவோம். மதச்சார்பின்மையை போற்றி பாதுகாப்போம். அரசு எந்திரங்கள் முறைகேடு செய்தால் தடுப்போம். சர்வதேச தரத்தில் கல்வி கொடுப்போம். நீர்வளத்தை பெருக்குவோம். நிலங்களை பாதுகாப்போம். தொழில் வளம் பெருக வேண்டும். ஏழைகளே இல்லாத நிலை உருவாக வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதுதான் எங்கள் கட்சியின் கொள்கை.

தற்போது 60 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக அறிவித்து இருக்கிறார்கள். வெட்கமாக இல்லையா? இத்தனை ஆண்டுகள் கழித்து அறிவித்திருக்கிறார்கள். நாம் தனியாக நிற்போம் என்றால் வருத்தப்படுகிறார்கள். நாம் தனியாக நிற்கவில்லை. மக்களோடு சேர்ந்துதான் நிற்கிறோம். சீட்டு கேட்டு நிற்கிறார்கள். சீட்டு கேட்டார்கள் என்று சொல்கிறார்கள். நின்று அடிக்க வேண்டிய இடத்தில் இருக்கும்போது நாங்கள் ஏன் சீட்டு கேட்போம்.

தவறு செய்தவர்களை தட்டிக்கேட்க நாம் வர வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு குதிரை பேரம் நடக்கும். அதற்கெல்லாம் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். தமிழக மக்களின் நலனை பாதுகாக்கின்ற கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். அரசியலை சரிசெய்ய வேண்டிய அவசியம் வந்துவிட்டது. தனித்து நிற்போம் என்றால் பணத்துக்கு எங்கே செல்வார்கள்? என்று கேட்கிறார்கள். மக்களிடம் இருந்து வசூல் செய்து தேர்தலை சந்திப்போம்.

நான் ரசிகர் மன்றத்தில் இருக்கும்போது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அழுக்குபடிந்த பணத்தை வாங்கித்தான் நற்பணி காரியங்களை செய்தார்கள். அதைத்தான் நாம் செய்ய போகிறோம். குறிப்பாக மக்களிடம் பணம் கொடுத்து தான் ஓட்டு கேட்பார்கள். ஆனால் மக்களிடம் பணம் பெற்று தேர்தலை சந்திக்கிறோம். அவர்கள் கொடுக்கும் பணம் முதலீடு. இந்த பணத்துக்கு உரிய பலனை நாங்கள் செய்வோம். சிலர் என்னை அவதூறாக பேசி வருகிறார்கள். பி.ஜே.பி.க்கு ‘பி’ அணி என்று என்னை சொல்கிறார்கள். இதனை நான் மறுக்கிறேன். என்றுமே நாங்கள் ‘ஏ’ அணி தான்.

நாளை நமது, நாளை மறுநாளும் நமது. நாளை என்பது டெல்லி செங்கோட்டை. நாளை மறுநாள் என்பது தமிழகத்தின் கோட்டை. இதனை நாம் புரிந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் நிதிக்காக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் உங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கமல்ஹாசனுக்கு வாள், கேடயம், செங்கோல் பரிசளிக்கப்பட்டது. விழா மேடையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 9 மணிக்கு பேச்சை தொடங்கிய கமல்ஹாசன், 9.50 மணிக்கு நிறைவு செய்தார்.

கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்ரீபிரியா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜான் சாமுவேல், கமிலா நாசர், குருவையா, ரெங்கராஜன், மவுரியா உள்பட பலர் பேசினார்கள். மாநில செயற்குழு உறுப்பினரும், இயக்குனருமான சிநேகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *