X

காந்தியின் தேசியத்தை அறியாத ஆர்எஸ்எஸ்காரர்களின் அடையாளம் இதுதான் – பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், “மகாத்மா காந்தி ஒரு சிறந்த ஆன்மா. கடந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அறியச் செய்வது நமது பொறுப்பு அல்லவா? தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு நிகரானவர் மகாத்மா காந்தி.

காந்தி மூலமாக இந்தியா கவனம் பெற்று இருக்க வேண்டும். காந்தியின் தத்துவம் உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதை உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு நான் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காந்தி குறித்து மோடி பேசியது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “1982 க்கு முன் மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படவில்லை என்று சொல்லும் பதவி விலகும் பிரதமர் எந்த உலகில் வாழ்கிறார் என்று தெரியவில்லை.

மகாத்மாவின் பாரம்பரியத்தை யாராவது அழித்திருந்தால், அது பதவி விலகும் பிரதமரே. வாரணாசி, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள காந்திய நிறுவனங்களை அவரது சொந்த அரசாங்கம் அழித்துவிட்டது. மகாத்மா காந்தியின் தேசியத்தை அறியாத ஆர்எஸ்எஸ்காரர்களின் அடையாளம் இதுதான். நாதுராம் கோட்சே காந்திஜியைக் கொன்றது அவரது சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான்.

2024 தேர்தல் மகாத்மா காந்தி பக்தருக்கும் கோட்சே பக்தருக்கும் இடையே நடைபெற உள்ளது. பதவி விலகும் பிரதமர் மற்றும் அவரது கோட்சே பக்தர் கூட்டாளிகளின் தோல்வி உறுதியாகியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.