X

காதல் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!

கோவை சுந்தராபுரம் காந்தி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் நாகார்ஜூனன் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சர்மிளா (27).

இவர்கள் 2 பேரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த பகுதியில் வாடகை வீடு எடுத்து தனியாக தங்கியிருந்தனர்.

நாகார்ஜூனனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். அவரை சர்மிளா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மேலும் சர்மிளாவின் நடத்தையிலும் நாகார்ஜூனனுக்கு சந்தேகம் இருந்தது. இது மேலும் அவர்களுக்கு இடையே பிரச்சினையை அதிகப்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று மதியம் நாகார்ஜூனன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், சர்மிளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகார்ஜூனன்,
கத்தியை எடுத்து சர்மிளாவை சரமாரியாக குத்தினார். சர்மிளாவின் கழுத்து, மார்பு, வயிறு என 8 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த சர்மிளா அந்த
இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

பின்னர் நாகார்ஜூனன் தனது நண்பர்களுடன் மது குடிக்கச் சென்றார். மது குடிக்கும் போது நண்பர்களிடம் தனது மனைவியை கொன்று விட்டதாக அவர் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த
நண்பர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகார்ஜூனனை கைது செய்தனர்.

கைதான நாகார்ஜூனன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், எனது மனைவி சர்மிளாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எனக்கு மது பழக்கமும், கஞ்சா புகைக்கும்
பழக்கமும் உள்ளது. திருமணத்துக்கு பிறகும் அந்த பழக்கம் தொடர்ந்தது.

சர்மிளா என்னை கண்டித்தார். நான் அவள் பேச்சை கேட்கவில்லை. சர்மிளா, அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார். இதனால் அவரது நடத்தையில் நான் சந்தேகப்பட்டேன். நேற்று மதியம்
வீட்டுக்கு வந்தபோது சர்மிளா, செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார்.

அதுபற்றி கேட்டபோது அவள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்து கத்தியை எடுத்து அவளை குத்தினேன். அவள் இறந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

உடனே இனி நாமும் உயிரோடு வாழக்கூடாது என முடிவு செய்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதற்காக போத்தனூர் பகுதிக்கு சென்றேன். அங்கு ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்தேன்.
நீண்ட நேரம் ஆகியும் ரெயில் வரவே இல்லை. அதன்பிறகு தான் நான் படுத்திருந்தது ரெயில் வராத தண்டவாளம் என்பது தெரியவந்தது.

அதன்பின் எனது தாயார் வசிக்கும் வீட்டுக்கு சென்றேன். அங்கு தூக்கு கயிறு மாட்டி தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் தூக்கு கயிறு அறுந்து விழுந்து விட்டது.

அப்போது மதுபோதை தெளியாமல் இருந்ததால் மீண்டும் குடித்து விட்டு வந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என மனதை மாற்றிக் கொண்டேன்.

மதுக்கடைக்கு சென்று எனது நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்தேன். அப்போது சர்மிளாவை கொன்றது பற்றி நண்பர்களிடம் உளறினேன். அவர்கள் போலீசுக்கு தகவல் சொல்லி என்னை
பிடித்துக் கொடுத்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

கைதான நாகார்ஜூனன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.