தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம்(வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா(20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அதற்கு கார்த்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 30-ந்தேதி அவர்கள் 2 பேரும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் காதல் தம்பதி 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்ட கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் மற்றும் கொலையில் தொடர்புடைய 2 வாலிபர்களை தனிப்படையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இசக்கி ராஜா, ராஜபாண்டி, இளம் சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.