கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது. சித்தப்பா பூசாரி மகள் பாக்கிய ஸ்ரீ (31). இவரும் அதே பகுதியில் உள்ள சாசாபாலு கிராமத்தை சேர்ந்த சங்கரப்பா தளவார் (32) என்பவரும் கல்லூரியில் படித்த போதிருந்தே காதலித்து வந்தனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்ய முடிவெடுத்த போது, சாதியை காரணம் காட்டி அவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரிந்து விட்டனர்.
சங்கரப்பா தளவார் திருமணமாகி 6 மாதத்தில் மனைவியை பிரிந்த பின்னர் தனது கிராமத்திலிருந்து கர்நாடக மாநில எல்லையான ஜிகினி தொழிற்பேட்டையில் வேலைக்கு சேர்ந்தார். அப்பகுதியில் தனி அறை எடுத்து தங்கிய அவர், தனது முன்னாள் காதலி பாக்கியஸ்ரீயுடன் அவ்வப்போது போனில் பேசி வந்துள்ளார். அவர்களுக்குள் இருந்த நெருக்கம் காரணமாக ஜிகினிக்கு வருமாறு பாக்கியஸ்ரீயை சங்கரப்பா அழைத்துள்ளார். அதன்பேரில் அவரும் ஜிகினிக்கு வந்துள்ளார். இருவரும் ஒரே அறையில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். மேலும், ஜிகினி தொழிற்பேட்டையில் வெவ்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் பாக்கியஸ்ரீயின் தம்பி லிங்கராஜ் (22), கடந்த 2015ம் ஆண்டு தனது அக்காவை தேடி ஜிகினி பகுதிக்கு வந்துள்ளார். ஜிகினியில் பாக்கியஸ்ரீ, அவரது முன்னாள் காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். சங்கரப்பாவிற்கு திருமணம் ஆகிவிட்டதால், அவருடன் இருக்க வேண்டாம் என பாக்யஸ்ரீயை பலமுறை லிங்கராஜ் எச்சரித்துள்ளார். ஆனாலும் பாக்கியஸ்ரீ அதனை கேட்கவில்லை. இதனையடுத்து 3 பேரும் ஒரே அறையில் தங்கி இருந்தபோது பாக்கியஸ்ரீயுடன் அடிக்கடி லிங்கராஜ் சண்டை போட்டு வந்துள்ளார். தங்களது உறவுக்கு லிங்கராஜ் இடையூறாக இருப்பதாக கருதிய பாக்கியஸ்ரீ, சங்கரப்பாவுடன் சேர்ந்து லிங்கராஜை அடித்து கொலை செய்து, அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டி 3 பையில் அடைத்து அதனை ஜிகினி மற்றும் அருகில் உள்ள மஞ்சன ஹள்ளி ஏரியில் இருவரும் வீசியுள்ளனர்.
பின்னர் பாக்கியஸ்ரீயும், சங்கரப்பாவும் ஜிகினியில் இருந்து தப்பி, மகராஷ்டிரா மாநிலம், நாசிக்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு சென்று பாக்கியஸ்ரீ (39), மற்றும் சங்கரப்பா (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.