காணும் பொங்கலுக்காக சுற்றுலாத்தளங்களில் குவிந்த மக்கள் கூட்டம்!
காணும் பொங்கலையொட்டி இன்று தமிழகம் முழுவதும் சுற்றுலாதலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பொருட்காட்சி திடல் மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றில் காலையிலேயே கூட்டம் அலைமோதியது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மெரினா கடற்கரையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தினகரன், பிரேம்ஆனந்த் சின்கா, அருள் ஆகியோரது மேற்பார்வையில் அனைத்து துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மெரினாவில் காந்தி சிலை அருகே தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது. நேப்பியார் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
உழைப்பாளர் சிலையில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையில் சர்வீஸ் சாலை நுழைவு வாயிலில் 11 உதவி காவல் நிலையங்கள், அமைக்கப்பட்டு இருந்தன. அவசர உதவிக்காக 7 ஆம்புலன்சில் மருத்துவக் குழுக்கள் பணியில் இருந்தனர். மீட்பு பணிக்காக தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் மோட்டார் படகுடன் மெரினாவில் மீட்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். 13 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அதிலிருந்தபடியே போலீசார் வாக்கி-டாக்கி, பைனாகுலர் மூலம் பணியில் ஈடுபட்டனர்.
3 பறக்கும் கேமிராக்கள் மூலம் போலீசார் கூட்டத்தை கண்காணித்தனர். 12 இடங்களில் நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே போலீசார் பார்த்தனர்.
மெரினா கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு இருந்தன. மெரினா கடற்கரையில் நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் காணப்பட்டது.
இதனால் கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. குதிரைப் படை வீரர்களும் 16 இடங்களில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இதே போல எலியஸ் கடற்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குழந்தைகளின் கைகளில் சிறிய வளையம் போன்ற அடையாள அட்டை கட்டப்பட்டது. அதில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதிய பின்னரே மெரினா மற்றும் எலியஸ் கடற்கரைக்குள் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் மூலம் காணாமல் போன பல குழந்தைகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.