‘காட்மேன்’ சர்ச்சை – இயக்குநர் ப.ரஞ்சித் கண்டனம்
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாஸ் படத்தை இயக்கியவர் பாபு யோகேஸ்வரன். இவர் தற்போது டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்மேன் எனும் வெப் தொடரை இயக்கி உள்ளார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த வெப் தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் ப.ரஞ்சித் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: “காட்மேன், தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள்.
இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய தயாரிப்பு நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்ப்புடையது அல்ல, மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க” என அவர் குறிப்பிட்டுள்ளார்.