Tamilசெய்திகள்

காட்பாடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று வேலூருக்கு வருகை தந்தார். அவர் சென்னையில் இருந்து ரெயிலில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன் வந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேலூர் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ, கதிர் ஆனந்த் எம்.பி. கார்த்திகேயன் எம்.எல். ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் ஒன்றிய குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், கவுன்சிலர் அன்பு, சுதாகர் 21-வது வார்டு செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காட்பாடி சாலையில் இருபுறம் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். வரும் வழியெல்லாம் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் திரண்டு இருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மேளதாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா நடைபெறும் பள்ளி போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. மெயின் ரோடு மற்றும் பள்ளி நுழைவுவாயில் என 2 அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மெயின் ரோட்டில் இருந்து பள்ளி வரை இருபுறமும் வாழை மரங்கள் மற்றும் பூக்களால் அலங்கார தோரணங்கள் செய்யப்பட்டிருந்தன.

பள்ளிக்கு வரும் அனைவரையும் தீவிர சோதனைக்கு பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கேமராக்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் கீழ் 36 மாவட்டங்களில் 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.784 கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 55 ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 114 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.15 கோடியே 96 லட்சத்தில் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மேம்பாட்டு திட்டத்தில் அரசு பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 670 அரசு பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி வழங்கப்படவில்லை.