Tamilசெய்திகள்

காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் விசைத்தறி கூடங்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் காட்டன் சேலைகள் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 6 மாத காலமாக கடுமையான நூல் விலை ஏற்றம் காரணமாக தொழில் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பதுக்கி வைத்துள்ள பஞ்சை கண்டறிந்து சந்தைக்கு கொண்டுவரவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக ரூ.80 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுவதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.