Tamilசெய்திகள்

காசுக்காக ஓட்டுப்போடும் புதுவை மக்கள்! – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பாராளுமன்ற-சட்டசபை தேர்தல்களில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகமாக உள்ளது.

இது சம்பந்தமாக ஜனநாயக மறுசீரமைப்பு என்ற அமைப்பு மற்றும் ஆர்.ஏ. ஆஸ்டரைஸ் கம்ப்யூட்டிங் நிறுவனம், டேட்டா சொலி‌ஷன் நிறுவனம் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், புதுவையில் 43 சதவீத மக்கள் காசு வாங்கி கொண்டு அதற்கு தகுந்த மாதிரி ஓட்டு போடுவதாக தெரிவித்தனர்.

இவர்களில் 35 சதவீதம் பேர் ஓட்டுக்கு காசோ, பரிசுகளோ முக்கியம் என்று கூறினார்கள். 10 சதவீதம் பேர் ஓட்டுக்கு காசு மிக, மிக முக்கியம் என்று தெரிவித்தனர்.

காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுவது சட்டப்படி குற்றம் என்று 65 சதவீதம் பேர் தெரிவித்தனர். 39 சதவீதம் பேர் பணம் பெறுவதில் தவறு இல்லை என்றும், பணத்துக்கு ஈடாக நாங்கள் ஓட்டு போட்டு விடுகிறோம் என்று கூறினார்கள்.

மேலும் இந்த ஆய்வில் குறிப்பிட்ட வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களுக்கு உதவி செய்தால் போதாது, தொடர்ந்து அவர்கள் உதவி செய்தால் தான் மக்களின் ஆதரவை தக்க வைக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.

மக்களின் வாக்குகளை பெறுவதற்கு முதல்-அமைச்சரின் செயல்பாடு அவசியமானது என்று 46 சதவீதம் பேர் கூறினார்கள். அதில் 36 சதவீதம் பேர் முதல்-அமைச்சரின் செயல்பாடு மிக, மிக முக்கியம் என்று தெரிவித்தனர்.

67 சதவீத வாக்காளர்கள் வேட்பாளரின் தகுதியை முக்கியமாக வைத்துதான் ஓட்டு போடுவோம் என்று தெரிவித்தனர்.

அதில், 12 சதவீதம் பேர் வேட்பாளர் தகுதி மிக முக்கியமானது என்று கூறினர். 46 சதவீதம் பேர் எந்த கட்சி வேட்பாளர் என்பதை பார்த்து ஓட்டு போடுவதாக கூறினார்கள்.

82 சதவீத வாக்காளர்கள் தன்னிச்சையாக சிந்தித்து ஓட்டு போட முடிவை எடுப்பதாக தெரிவித்தனர். 9 சதவீதம் பேர் தனது கணவர் அல்லது மனைவி சொல்படி முடிவு எடுப்பதாக கூறினார்கள்.

3 சதவீதம் பேர் அரசியல் தலைவர்கள் ஆலோசனையின் பேரில் ஓட்டு போடுவோம் என்று சொன்னார்கள்.

பாராளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் கிரிமினல் குற்ற பின்னணி இருந்தால் ஓட்டு போட மாட்டோம் என்று 99 சதவீதம் பேர் கூறினார்கள். ஆனால், தங்கள் வேட்பாளரின் குற்ற பின்னணி குறித்து சரியாக தெரிவதில்லை என்று பெரும்பாலானோர் தெரிவித்தனர்.

32 சதவீதம் பேர் வேட்பாளர்களின் குற்ற பின்னணி தெரியும் என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *