இஸ்ரேல் நாட்டுக்கும் அதன் அருகில் உள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீரென போர் ஏற்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை காலை 6.35 மணிக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் 22 இடங்களில் ஊடுருவி அதிரடி தாக்குதலை நடத்தினார்கள்.
சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் முக்கிய இடங்களில் குண்டுகளை வீசினார்கள். பல இடங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் மற்றும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்களது வாகனங்களில் ஏற்றி பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். காசா பகுதிக்குள் அப்படி கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பிணை கைதிகள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
6.35 மணி முதல் 8.30 மணிக்குள் சுமார் 2 மணி நேரத்தில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் முதலில் இஸ்ரேல் அதிர்ச்சியால் நிலை குலைந்தது. அந்த நாட்டின் வான் மண்டல பாதுகாப்பு கை கொடுக்காததால் இஸ்ரேலின் பல பகுதிகள் தரைமட்டமானது.
சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகுதான் இஸ்ரேல் தனது பதிலடியை ஆரம்பித்தது. காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தலைமையகம் உள்பட பல கட்டிடங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. அடுத்தடுத்து ஏவுகணை தாக்கு தலையும் இஸ்ரேல் மேற்கொண்டது. நேற்று 2-வது நாளாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் நடந்தது. இதில் இஸ்ரேலில் சுமார் 700 பேரும், காசாவில் 500 பேரும் என சுமார் 1,200 பேர் பலியானார்கள். 10 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) 3-வது நாளாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நீடித்தது. இன்று அதிகாலை இரு தரப்பினரும் ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்குதலை நடத்தினார்கள். இதற்கிடையே 22 வழிகளில் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை இன்று இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இதற்காக இஸ்ரேல் தெற்கு பகுதிகளுக்கு கூடுதல் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் இஸ்ரேல் தெற்கு பகுதிக்கும் காசாவுக்கும் இடையே உள்ள பகுதி மிக பயங்கரமான போர்க்களமாக மாறி உள்ளது.
பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு வசதியாக 20 ஆயிரம் பேரை இஸ்ரேல் இடமாற்றம் செய்துள்ளது. பொதுமக்களை ராணுவ பதுங்கு அரங்குகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்து உள்ளனர். எனவே வரும் நாட்களில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் முன்களத்தில் நிற்கும் இஸ்ரேல் வீரர்களில் இதுவரை சுமார் 54 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் நீண்ட காலம் போருக்கு தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எனவே போர் மேலும் உக்கிரம் ஆகும் என்று கூறப்படுகிறது.