X

காசா மீதான் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது – இஸ்ரேல் அதிபரை விமர்சித்த பிரியங்கா காந்தி

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். நாடாளுமன்றத்திற்கு சென்ற நேதன்யாகுவை சபாநாயகர் மற்றும் எம்.பி.க்கள் கைதட்டி அமோக வரவேற்பு கொடுத்தனர்.

நேதன்யாகு பேசும்போது காசா மீதான தாக்குதலை நியாயப்படுத்தினார். இந்த போர் காட்டுமிராண்டித்தனத்திற்கும், நாகரீகத்திற்கும் இடையிலானது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்தான் நேதன்யாகு மற்றும் அவரது அரசை காட்டுமிராண்டித்தனம் என பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பிரியங்கா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காசா மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனம்- நாகரீகம் இடையிலான மோதல் என நேதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் சரியானது. அவரும், அவருடைய அரசும் காட்டுமிராண்டித்தனமானது. அவர்களுடைய காட்டுமிராண்டிதனத்திற்கு பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வருகின்றன. இதை பார்ப்பதற்கு மிகவும் அவமானமாக உள்ளது.

காசாவில் நடக்கும் கொடூரமான இனப்படுகொலை மூலம் பொதுமக்கள், தாய், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் நாளுக்கு நாள் அழிக்கப்படும் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகளுக்காக குரல் கொடுத்தால் மட்டும் போதாது.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கண்டித்து அவர்களைத் தடுக்க வற்புறுத்துவது, வெறுப்பு மற்றும் வன்முறையில் நம்பிக்கையில்லாத சரியான சிந்தனையுள்ள அனைத்து இஸ்ரேலிய குடிமக்கள் உட்பட ஒவ்வொரு நபர் மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும்.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.