X

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசாவில் நகரங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது குண்டு பாய்ந்து 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

போர் என்பதே கொடூரமானது! அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் – உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.

போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், ” காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறு குழந்தைகள் உட்பட பல மனிதர்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ள நிலையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மருத்துவமனைகள் போன்ற வளாகங்களில் தாக்குதல் நடத்தக்கூடாத சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. வரலாற்றில் எப்பொழுதும், இன்றும் ஒரு போரை உலகம் தாங்க முடியாது. எந்தவொரு பிரச்சினைக்கும் போர் ஒருபோதும் தீர்வாகாது. காசாவில் அமைதியை மீட்டெடுக்கவும், மனிதாபிமானமற்ற வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐநா மற்றும் சர்வதேச வீரர்கள் முன்வர வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: tamil news