Tamilசெய்திகள்

காசா மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 11-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட் தாக்குதலே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அல் அக்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகளே காரணம். அவர்கள் வீசிய ராக்கெட்கள் குறிதவறி மருத்துவமனை மீது விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், காசா மருத்துவமனை தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர்ச் சேதத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். இந்த செய்தியைக் கேட்டவுடன் ஜோர்டான் மன்னர் 2-ம் அப்துல்லா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆகியோரிடம் பேசினேன். என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்கும்படி தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன். வெடிவிபத்தில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற அப்பாவிகளுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.