இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டை இன்று 45- வது நாளை எட்டி உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது முதலில் வான்வெளி வழியாக குண்டுகளை வீசிய இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காசாவில் மிகப்பெரிய மருத்துவ மனையாக உள்ள அல்-ஷிபா ஆஸ்பத்திரி சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் பல்வேறு கட்டிடங்கள் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை ஹமாஸ் அமைப்பினர் தங்களது போர்களமாக பயன்படுத்தி வருவதாகவும், உள்ளே ஏராளமான சுரங்க பாதைகள் அமைத்து பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. ஆனால் இதனை ஹமாஸ் மறுத்து வருகிறது.
இதையடுத்து அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கிருந்து பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பொது மக்கள் வெளியேறி விட்டனர். ஆஸ்பத்திரி முழுவதும் இஸ்ரேல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதில் ஆஸ்பத்திரிக்குள் மிகப்பெரிய அளவில் 10 மீட்டர் ஆழத்தில் 55மீட்டர் நீளத்துக்கு சுரங்கபாதைகள் இருப்பதை இஸ்ரேல் படையினர் கண்டுபிடித்தனர். இந்த சுரங்க பாதையை ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படு கிறது. இது தொடர்பாக வீடியோவினை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதே போல பல பதுங்குகுழிகளை கண்டுபிடித்து அழித்து விட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து ஆஸ்பத்திரி முழுவதும் சுரங்கபாதைகள், பதுங்கு குழிகள், பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரேல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 நாட்களில் புதிதாக பிறந்த 3 குழந்தைகள் உள்பட 24 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி இருக்கும் 240 பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்து உள்ளது. இது தவறான தகவல் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவும் இதனை மறுத்து இருக்கிறது.