X

காசாவில் உணவு பொட்டலங்களுடன் வந்த பாராசூட் பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் பலி

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் இருக்க இடம் இல்லாமல், உணவு இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் நான்கில் ஒருவர் பசியால் வாடுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் கடும் கட்டுப்பாட்டால் மனிதாபிமான உதவிகள் மக்களுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நிவாரணப் பொருட்கள் சென்ற லாரிகளை மக்கள் முற்றுகையிட்டதால், இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனால் வான்வழியாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று காசாவின் வடக்குப்பதியில் உள்ள ஷாதி என்ற பகுதியில் பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. அப்போது ஒரு பாராசூட் விரியாமல் பழுதானதாக தெரிகிறது. அந்த பாராசூட் உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்துள்ளது. இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். அத்துடன் உணவுப் பொட்டலங்கள் மக்களின் தலையில் விழுந்து பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பசியால் வாடும் மக்கள் உணவு பொட்டலங்கள் வாங்க காத்திருக்கும்போது உயிரிழக்கும் சம்பவம் வேதனை அளிப்பதாக உள்ளது.

“வான் வழியாக பயனற்ற உணவு வினியோகம், மனிதாபிமான சேவையை காட்டியிலும் இது விளம்பரம் படுத்துவதற்கான பிரசாரம். நிலப்பரப்பு எல்லை வழியாக பொருட்கள் கொண்டு வந்த வழங்கப்பட வேண்டும் என காசா அரசின் மீடியா அலுவலகம் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளது.

மேலும் “வான்வழியாக உணவு பொட்டலங்கள் போடும்போது அது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரித்தோம். தற்போது நடத்திருப்பது உணவுப் பொட்டலங்கள் மக்களின் தலையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.