X

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது!

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தயாரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை தொடர்பு கொண்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டு வருவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

கன்னியாகுமரி தொகுதியை பெற போட்டா போட்டி நிலவுகிறது. வசந்தகுமார், ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ், ராபர்ட் புரூஸ், அசோக் சாலமோன் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. இதேபோல், திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு செல்வபெருந்தகை, விஸ்வநாதன், விக்டரி ஜெயக்குமார், ஜெயக்குமார் (நாமக்கல்), ராணி ஆகியோர் ‘சீட்’ கேட்டு வருகின்றனர்.

ஆரணி தொகுதியில் போட்டியிட விஷ்ணுபிரசாத், நாசே ராமச்சந்திரன், சுமதி அன்பரசு ஆகியோர் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். திருச்சி தொகுதியில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குஷ்புவும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதால் இழுபறி நீடிக்கிறது. ஈரோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படாத நிலையில், விருதுநகர், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாய்ப்பு கேட்டு வருகிறார்.

கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பேங்க் சுப்பிரமணியன் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது. சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தில் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் மீதான வழக்குகளை காரணம் காட்டி கட்சித் தலைமை யோசிப்பதாக தெரிகிறது.

இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாகவே ‘சீட்’ கேட்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

Tags: south news