Tamilசெய்திகள்

காங்கிரஸ் மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

கடந்த 2005-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், பெங்களூருவை சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம், 2 எஸ் பாண்டு செயற்கைகோள்களை தேவாஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும். அவற்றை பயன்படுத்தி மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம் சேவையை தேவாஸ் நிறுவனம் வழங்குவதாக இருந்தது. ஆனால், இதில் முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்ததால், கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என கோரி, சர்வதேச வர்த்தக தீர்ப்பாயங்களில் தேவாஸ் நிறுவன பங்குதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதன்படி இந்திய அரசு, தேவாஸ் நிறுவனத்துக்கு 129 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பாயங்கள் உத்தரவிட்டன.

இதை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த இழப்பீட்டை பெற வெளிநாடுகளில் உள்ள இந்திய சொத்துகளை கையகப்படுத்த தேவாஸ் நிறுவன பங்குதாரர்கள் முயன்று வருகிறார்கள்.

இதற்கிடையே, தேவாஸ் நிறுவனத்தை கலைக்க வேண்டும் என்று தேசிய கம்பெனி சட்ட வாரிய தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தேவாஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அம்மனுவை நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. மோசடி நோக்கத்துடன் தேவாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டதால், அதை கலைக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது.

இந்த உத்தரவின் பின்னணியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம், இந்தியாவுக்கு எதிராகவும், மக்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட ஒரு மோசடி. பாதுகாப்பு அமைப்புகள் தேச பாதுகாப்புக்காக பயன்படுத்தும் எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரமை அற்ப பணத்துக்காக தேவாஸ் நிறுவனத்துக்கு கொடுக்க காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் செய்தது. தேவாஸ் நிறுவனத்துக்கு உரிமை இல்லாத வசதிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தது.

இந்த ஒப்பந்தம் ரத்துக்காக இந்தியா 129 கோடி டாலர் இழப்பீடு கொடுக்க வேண்டியுள்ளது. மக்களின் வரிப்பணத்தை கொடுக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இந்த அரசு போராடி வருகிறது. தேவாஸ் நிறுவனத்தின் மோசடி நோக்கத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.